வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும்
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்
- திருக்குறள் – துறவு – 346
இக்குறளில் வரும் “வானோர்க்குயர்ந்த உலகம் புகும்” என்ற
தொடர் மிகவும் முக்கியமானது. இத்தொடரில், அண்டவியல்
பற்றியக் குறிப்பு வருகிறது. ”வானோர்க்கும் மேலே உள்ள
உலகத்தில் புகும்” என்று சொல்லும் போது, வானோர்கள்
உலகம் யாது? அவர்களின் உலகத்திற்கும் மேலே உள்ள
உலகம் யாது? என்பனப் போன்ற கேள்விகள் எழுவது
இயற்கைத்தான். அவற்றுக்கு விடைக் காண வேண்டியது
முக்கியம்.
அவற்றைப் பார்க்கும் முன் இக்குறளுக்கு உரையாசிரியர்கள்
என்ன சொல்கிறார்கள் என்றுப் பார்த்துவிட்டு மேல் செல்லலாம்.
முதலில் பரிமேலழகர்
உரை: யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் – தான்
அல்லாத உடம்பை யான் என்றும் தன்னோடு இயைபு இல்லாத
பொருளை எனது என்றும் கருதி அவற்றின்கண் பற்றுச்
செய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான்; வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் – வானோர்க்கும் எய்தற்கு அரிய
வீட்டுலகத்தை எய்தும்.
மயக்கம்: அறியாமை. அதனைக் கெடுத்தலாவது தேசிகர் பால்
பெற்ற உறுதிமொழிகளானும் யோகப் பயிற்சியானும் அவை
’யான்’, ‘எனது’ அன்மைதெளிந்து, அவற்றின்கண் பற்றை
விடுதல் சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான்
இவ் இருவகைப் பற்றினையும் விட்டார்க்கே வீடு உளது
என்பது கூறப்பட்டது.
அப்படியே மணக்குடவரையும் படித்துவிடுவோம்,
உரை: யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை
அறுக்குமவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்.
பரிமேலழகர் உரைவேறுபாடு
வழக்கம் போலவே இக்குறளிலும் தன் கைவண்ணத்தைக்
காட்டியிருக்கிறார் நம்ம பரி. அவர் உரை விரிவாகக் கூறப்பட்டிருப்பதுப்
போல் தோன்றினாலும், உண்மை பொருளை மறைத்துக் கூறியிருக்கிறார்.
எவ்வாறெனின்,
“வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் – வானோர்க்கும் எய்தற்கு
அரிய வீட்டுலகத்தை எய்தும்” என்கிறார். மேலோட்டமாகப்
பார்த்தால் பொருள் சரியாகயிருப்பதுபோலத் தான் தோன்றும்
ஆனால், கூர்ந்து நோக்கினால் அதில் அவர் கையாண்ட பொருள்
மாற்றம் தெரியவரும்.
வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும் – இதற்கு வானோர்கள்
(தேவர்கள்) வசிக்கும் ”உலகத்திற்கும்” உயர்ந்த உலகம் புகும்
என்று தான் பொருள். ”வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகம்
எய்தும்” என்று அவர் உரை செய்திருப்பது இங்குப் பொருந்தாது.
அவ்வாறு உரைச் செய்யும் போது அவற்றின் நேரான பொருள்
மறைந்துப் போய் விடுகிறது. இவற்றை ஆராய்வோம்.
மணக்குடவர் உரை நேரிதன் பொருள் உரைக்கிறது. ” தேவர்க்கு
மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்” தேவர்க்கு மேலாகிய –
தேவர்கள் உறையும் உலகத்திற்கும் மேலாகிய உள்ள உலகத்தின்
கண்ணே செல்லும். என்பதுதான் சிறப்பான உரை.
சமண அண்டவியல்
சமணக் கோட்பாட்டின்படி, உயரின் தன்மைகளில், மேல் எழுப்பிச்
செல்லும் இயல்பும் ஒன்று. இதை
“வினையற விட்ட போழ்தின் வெடித்த ஏராண்டம் போல
நினைவரும் குணங்கள் எட்டும் நிறைந்து மேல் நோக்கி.. ”
என்று மேருமந்தர புராணம் கூறும்.
உயிரானது தன் வினைக் கட்டுக்களிலிருந்து நீங்கி, தன் சொரூபத்தை
உணரும் போது, மூவுலனின் உச்சியாகிய சிலாத்தலம் என்னும்
இடத்தில் போய் நீடு வாழும்/ நிலையாக தங்கும். இதை
“முனிவரும் உலகம் மூன்றும் இறைஞ்ச மூவுலகின் உச்சி
கனைகழல் அரசே நிற்றல் கைவலம் ஆகும் கண்டாய்”
என்று மேருமந்தர புராணம் கூறும்.
இச்சிலாத்தலம் வீடு, சித்தசேத்திரம், திருப்பேருலகம். மீளாகதி,
சித்தலோகம், அபாதம், லோகாக்ரம், சித்தசிலா, மோட்சத்தளம்,
உலகுச்சி, நிலமிசை, சிவகதி உறைநிலை போன்ற பெயர்களாலும்
அழைக்கப்படுகிறது.
மூன்று உலகம்
சமண அண்டவியல்படி, இந்த அண்டமானது மூன்று உலகங்களைக்
கொண்டது.
மேல் உலகம் - ஊர்த்வ லோகம் (பல அடுக்குகள் கொண்ட இந்த
இடத்தில் பலதரப்பட்ட வானவர்கள்/தேவர்கல் வசிக்கிறார்கள்)
மத்திய உலகம் – மத்ய லோகம் (மனிதர்கள், மிருகங்கள்,
பறவைகள், ஊர்வன மற்றும் கிருமிகள் வசிக்கும் இடம்)
கீழ் உலகம் – அதோ லோகம் (ஏழு அடுக்குகள் கொண்டது.
நரகவாசிகள் – நரகப் பிறப்பெடுத்த உயிர்கள் வசிக்கும் இடம்)
இவற்றின் குறியீடுதான் தீர்த்தங்கரர்களின் படிமத்தின் தலைமேற்க்
காட்டும் முக்குடைகள். மூன்று உலகத்தையும் கடந்து வென்றவர்
என்ற நோக்கில் முக்குடைக் காட்டப்படுகிறது.
“திங்கள்மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்”
என்று சிலப்பதிகாரத்தில் வருவதைக் காண்க.
மேல் உலகம் – ஊர்த்வ லோகம்
மொத்தம் பதினாறு அடுக்குகளைக் கொண்டது இந்த மேலுலகம்.
இவற்றில் பலவகைப் பட்ட தேவர்கள் வாழ்கிறார்கள். தேவர்களிலும்
பலப் பிரிவுகள் சொல்லப்படுகிறது. அதையும் தாண்டி உச்சியை
சிலாத்தலம் என்றும் சித்தசிலை என்று அழைக்கப்படுகிறது.
வீடுபேறடைந்த உயிர்கள் சென்றடைவது இங்கேதான். சமண
கோட்பாட்டின்படி, வீடுபேறடைந்த உயிர்கள் மறுபடியும்
பிறப்பெடுப்பதில்லை.
இவற்றைக் கீழே வரும் பாடல் விளக்கக் காணலாம்.
“நடுவண் எண்புகைக் கொழுப்பாய் நந்தி ஈச்சிறகொத்து ஈற்றிற்
குடை மலர்ந்திருந்ததே போன்று இரண்டரை தீவோடு ஒத்துக்
கடையிலா அறிவு காட்சி உடையவர் கழுமி நின்ற
இடமது உலகத்து உச்சி ஏத்தருந் திறத்ததாமே”
என்று மேருமந்தர புராணம் பகரும்.
உலகுச்சி அல்லது சித்தசிலா அல்லது நிலமிசை
உயிரைவிட்டு அனைத்துக் கருமங்களும் நீங்குதல் அல்லது
விடுதல் வீடுபேறு எனப்படும். இது மொக்கம், மோக்ஷம்,
முக்தி, கைவல்யம், சித்தத்துவம், சிவகதி, சிவசுகம்,
நிர்வாணம், பரிநிர்வாணம், சேமம், சித்தகதி, பஞ்சகதி,
திரிதராகதி, அட்டமபுடலி, மீட்சியில் வீட்டுலகம், மீட்சியில்
பேரின்பம், இறுதியிலா பேரின்பம், பேர்த்துப் பிறவா பெருமை,
மீண்டுவாரா நெறி என பலவாறாகக் கூறப்படுகிறது.
“கேவல மடந்தை என்னுங் கேழ்கிளர் நெடிய வாட்கட்
பூவலர் முல்லைக் கண்ணிப் பொனொரு பாக மாகக்
காவலன் தானோர் கூறாக கண்இமை யாது புல்லி
மூவுல குச்சி இன்பக் கடலுனுள் மூழ்கி னானே”
- சீவக சிந்தாமணி (3117)
என்றும்,
”அலகில் பெருங்குணத்தோ னாவரண நீக்கி
உலக மலோக முடனே விழுங்கிப்
புலவன் முடிவென்னும் பூங்கொடியுந் தானும்
நிலவு சிவகதியு ணீங்காது நின்றான்”
- சூளாமணி (2125)
என்றும்,
”மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”
- திருக்குறள் (3)
முடிபு
வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும் என்பது வானோர்கள்
இருக்கின்ற அல்லது வசிக்கின்ற இடத்திற்கும் உயர்ந்த
உலகமான சிலாத்தலத்தில் தங்கும் என்பதுதான் நேரடையான
பொருள். பரிமேலழகர் தன் உரையில் சிறிது மாற்றிப்
பொருள் தந்திருக்கிறார் என்பது வெள்ளிடை மலை.
இரா.பானுகுமார்,
சென்னை
பி.கு: மேல் தகவலுக்கு கீழேச் சுட்டியைப் பார்க்கவும்!
http://en.wikipedia.org/wiki/Jain_cosmology
http://en.wikipedia.org/wiki/Moksa_(Jainism)
Wednesday, June 01, 2011
வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும்
Monday, May 23, 2011
ஓம் அல்லது ஓங்காரம்
ஓங்காரம் என்னும் பஞ்சபரமேஷ்டி
வித்தியாரம்பக் காலங்களில் ஓம் என்னும் அஷரத்தை சொல்ல,
சொல்லிக் குழந்தைகளுக்கு எழுத்தை எழுதச் சொல்லிக்
கொடுப்பார்கள் உபாத்தியாயர்கள். சிறுவனாகயிருந்தபோது
ஓம் என்பதற்கான முழுப் பொருள் எனக்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. இந்து மதத்தவர்களிடையே வளர்ந்ததன்
காரணமாக ஓம் என்பது இந்து மத அஷரம் (பதம்) என்றே
நினைத்திருந்தேன். திரைப்படங்களில், சடாமுடியுடன் தவசி
ஒருவர், சதா ஓம் என்று உச்சரித்துக் கொண்டேயிருப்பது
போல் வந்த காட்சிகளும் அப்படி நினைக்க ஒரு காரணமாக
இருந்திருக்கலாம்.
ஒரு நாள் என் தாத்தாவிடம் விளக்கம் கேட்டதற்கு ஓம்
என்பது பஞ்ச பரமேஷ்டிகளின் ஸ்வரூபம் என்றார். ஆனால்
அதற்கு மேல் அவர் விளக்கங் சொல்லவில்லை. அப்போது,
சிறுவனான எனக்கு புரியாது என்று நினைத்தாரோ என்னவோ!
இன்றைய நிலையில், யாந்தமிழ்ப் பண்டிதனல்லன், ஆகினும்
தமிழ்ப் (பா) படித்தால் புரிகிறது. எனினும், சங்கப் பாடல்கள்
உரையில்லாமல் புரிவது கடினமாகத்தான் இருக்கிறது. ஓம்
என்னும் பதத்தைப் பற்றி (சமணத்தில்) யான் அறிந்ததை
இங்கு உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். குறையிருப்பின்
தவறாமல் சுட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன்!
ஓம் எனும் பிரணவம்
ஓம் என்னும் அசஷரம் ஏறக்குறைய எல்லா இந்திய
சமயங்களிலும் காணலாம். அவைகள் ஓம் என்ற
பதத்திற்கு தத்தம் கருத்தை விளக்கிச் செல்கின்றன.
தற்போது, இந்து சமயம் என்று அறியப்படும் பிரிவுகளில்
ஒன்றான சைவச் சமயத்தில் ஓம் என்ற அஷரத்திற்கு
கீழ்க் காணும் விளக்கம் தரப்படுகிறது.
“ஓம் எனும் பிரணவம் ஓர் எழுத்துப்போல் தோன்றினாலும்
அதில் அ-உ-ம் எனும் மூன்று எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன”1
என்றும்,
”ஆதியில் இறைவனிடத்திலிருந்து தோன்றிய ஒலி நாதமும்,
பிந்துவுமாகும். நாதமும் பிந்துவும் சேர்ந்ததே ஓங்காரமாகும்.”2
என்றும்,
”பிரணவமே எல்லா மந்திரங்களுக்கும் மூல மந்திரமாகும்.
ஓம் எனும் பிரணவ மந்திரத்தை முதலில் கூறியே எல்லா
மந்திரங்களையும் கூறவேண்டுமெனும் நியதி ஏற்பட்டுள்ளது”3
என்று கூறுகிறார் மகாவித்துவான்.கே.ஆறுமுக நாவலர்.
ஓம் என்ற சொல்லாட்சிக்கு, யான் அறிந்தவரை மேல் சொன்ன
விளக்கத்தையொட்டியே அவைகள் விளக்கப்பட்டிருக்கின்றன.
பெளத்தச் சமயத்தில் என்ன சொல்லப்பட்டிருகிறது என்பதை
திரு.வினோத் ராஜன் அவர்களிடம் கேட்கவேண்டும். :-)
ஓம் என்ற சொல்லாட்சி சமணத்திலும் பயின்று வருகிறது.
சமணர்களின் மூல மந்திரம் பஞ்ச மந்திரம். அவற்றின்
சுருக்கமே ”ஓம்”. ஓம் என்றால் பஞ்ச மந்திரத்தை நமஸ்காரம்
செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
பஞ்ச மந்திரம்
நமோ அரஹந்தாணம் (அருகரை வணங்குகிறேன்)
நமோ சித்தாணம் (சித்தரை அல்லது அசரீரியை வணங்குகிறேன்)
நமோ ஆயிரியாணம் (ஆச்சாரியரை வணங்குகிறேன்)
நமோ உவச்சாயாணம் (உபாத்தியாயரை வணங்குகிறேன்)
நமோ லோயே சவ்வ சாகுணம் (சாதுக்களை அல்லது முனிவர்களை வணங்குகிறேன்)4
இது சமணர்களின் முழுமுதற் மூல மந்திரம். பஞ்ச மந்திரம்
எனப்படும். இல்லறத்தாரும், துறவறத்தாரும் ஐந்து வேளையும்
உச்சரிக்கவேண்டிய மந்திரம். இந்த மந்திரத்திற்கு பஞ்ச நமஸ்காரம் 5,
ஓங்காரம் 6, நமோங்காரம் , மொழிப்பொருள் தெய்வம்7,
ஐந்தெழுத்து மந்திரம் 8, திருமந்திரம் 9, பஞ்ச பரமேஷ்டி மந்திரம்10
என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
“பஞ்ச மந்திரம் பாபநாசனம்”11 என்பது சமணர்களின் அசைக்கமுடியாத
நம்பிக்கை. பஞ்ச மந்திரம் உச்சரிப்பால் நல்வினைக் கட்டு ஏற்படும்
என்றும் அறச்சிந்தனை ஏற்படும் என்றும் சமணர்களின் நம்பிக்கை.
இதற்கு சாட்சிப் பகரும் வண்ணம்,
“...வைதிக பிராமணர்கள் தங்களுக்கென்று செய்து வைத்த
சோற்றை ஒரு நாய் உண்ண, ஆத்திரம் அடைந்த அந்த
பிராமணர்கள் அந்நாயைக் கல்லாகும், தடியாலும்
அடிக்கிறார்கள். குற்றூயிருமாய், குலையுயிருமாய்
இருக்கும் அந்த நாயின் காதில் பஞ்ச நமஸ்கார
மந்திரத்தை ஓதுகிறான் சீவக நம்பி. சாகும் தருவாயில்
இந்த நமோங்கார மந்திரத்தைக் கேட்டதினால், அந்த நாயானது
தேவலோகத்தில் தேவனாகப் பிறந்ததாக”12
சொல்கிறது தமிழ்ச் சமண இலக்கியம்.
மேலும் பாட்டிற்கு அருங்கலமாகும் இந்த பஞ்ச மந்திரம்
என்று கீழே வரும் பாட்டு சொல்கிறது.
”பூவுக் கருங்கலம் பொங்குசெந் தாமரை
தேவர்க் கருங்கலம் திங்கள் முக்குடை
பாவுக் கருங்கலம் பஞ்ச மந்திரம்
நாவுக்கு அருங்கலம் நமோஅரஹந் தாணமே13!”
ஓம்
சமணத்தில் ஓம் எனும் அஷரம் பஞ்ச பரமேஷ்டிகளான
அரஹந்தர், சித்தர், ஆச்சாரியர், உபாத்தியாயர் மற்றும்
சாதுக்களைக் குறிக்கும். . பஞ்ச மந்திரத்தில் முதல் எழுத்தைக்
கொண்டு அ சி ஆ உ சா என்று சுருக்கமாக ஐந்தெழுத்து
மந்திரமாகப் பயன்படுத்துவார்கள். பஞ்ச நமஸ்காரத்தின்
முழுப் பலனையும் இந்த ஐந்தெழுத்து மந்திரத்தில் பெறலாம்.
இவ்வாறு சுருக்கிய ஐந்தெழுத்து மந்திரத்தை மேலும்
சுருக்கி ஓம் என்றும் கூறுவர். அவ்வாறு உச்சரிப்பதால்
முழு மந்திரமும் சொன்ன பலனும் இந்த ஓம் என்னும்
பதத்தை உச்சரிப்பதினால் கிடைக்கும். இதுவே ஓங்காரம்
என்னும் பஞ்ச மந்திரமாம்.
தமிழ் இலக்கியத்திலேயே ஓம் என்பதற்கான விரிவுச் சமண
இலக்கியத்தில்தான் காணமுடிகிறது.
ஓங்காரப் புணர்ச்சி
இனி, பஞ்ச மந்திரத்தில் உள்ள ஐந்தெழுத்துக்கள் எவ்வாறு ஓம்
என்று பரிணமிக்கிறது என்பதைப் பார்ப்போம்.
எண் பஞ்ச பரமேஷ்டிகள் முதலெழுத்து எழுத்துப் புணர்ச்சி
1 அருகர் அ -
2 அசரீரி அ அ+அ = ஆ
3 ஆசார்ரியார் ஆ ஆ+ஆ = ஆ
4 உபாத்தியாயர் உ ஆ+உ = ஓ
5 முனிகள் (ம்+உ=மு) ம் ஓ+ம் = ஓம்
இவற்றை, சமண இலக்கியங்களில் பயின்று வருவதையுங் காணலாம்.
“அறிவரிய குணத்தருக னசரீரி யாசிரிய னுவாத்தி கோதஞ்
செறிவரிய முனிவரெனுந் திருநாம முதலெழுத்தோரைந்துஞ் சேர்ந்து
பிறிவரிய வோங்கார முன்னுரைப்பர் பின்னுமதன் பெருமை யோரார்
பொறிவழியில் வருநாதர் பொருளில்வரும் பெயர்புனையும் புவனத்தாரே”14
உரை: அறிதற்கு அரிதாகிய குணங்களையுடைய அருகனும்,
சித்தரும், ஆசாரியனும்,உபாத்தியாயனும் குரோதமானது
இல்லாத சாதுக்களும் என்று சொல்லப்படும் திருப்பெயரினுடைய
ஆதியெழுத்துக்களைந்தும் கூடிப்பிறிதற்கரிதாகிய ஓங்காரத்தை
முன்னே சொல்லுவார்; பின்பும் அவ்வோங்காரத்தினுடைய
உற்பத்தியினது மேன்மையைப் பகுத்தறியார், ஐம்பொறியுனுடைய
மார்க்கத்தில் திரிகின்ற தெய்வங்களுக்குப் பொருளில்லாமல்
வறுமையாகிய நாமத்தை அலங்கரித்துச் சொல்லும் உலகத்தார்
என்றவாறு!
விரிவுரை: இதனால் ஓங்காரம் பஞ்சபரமேஷ்டி ஸ்வரூபம் என்பது
கூறப்பட்டது.
மேலும், வடமொழிச் சூத்திரமும்,
“அரஹந்தா அசரீரா ஆயிரியா தஹ உவத்தாயா முனினோ|
படமம் கரணம் பண்ணோ ஓம்கார பஞ்ச பரமேஷ்டி ||15
விளக்குவதைக் காணலாம்.
முடிபு: ஓங்காரம் என்பது பஞ்சபரமேஷ்டிகளின் குறியீடு என்பதும்
அவற்றை உச்சரிப்பதால் நம் வினைகள் தொலையும் என்பது திண்ணம்!
இரா.பானுகுமார்,
சென்னை
அடிக்குறிப்பு:
1. இந்துமத இணைப்பு விளக்கம் – பக்கம் 77 (தொண்டன் காரியாலய வெளியீடு)
2. இந்துமத இணைப்பு விளக்கம் – பக்கம் 78 (தொண்டன் காரியாலய வெளியீடு)
3. இந்துமத இணைப்பு விளக்கம் – பக்கம் 79 (தொண்டன் காரியாலய வெளியீடு)
4. கிரியா கலாபம் – பாடல் – 118
”கா ஊண ணமோங்காரம் தஹேவ சித்தாணம்
ஆயிரிய உவச்சா யாணம்
ளோயம்மிய ஸ்வ்வ ஸாஹீணம்”
5. கிரியா கலாபம் – பாடல் - 114
”ஜிந ஸித்த சூரிதேசக
ஸாதுவரா நமலகுண கணோ பேதாந்
பஞ்ச நமஸ்கார பதைஸ் த்ரிசந்த்ய
மபி நெளமி ஸம் ப்ரீத்யா”
6. திருக்கலம்பகப் பாடல்
7. சிலப்பதிகாரம் – புகார்க் காண்டம் – நாடுகாண் காதை – பாடல் வரி - 100
8. திருமேற்றிசை அந்தாதி – பாடல் – 91
”ஓளிக்கும் பழவினை நாளிடைப் பார்த்து உயிர்கோள் இழைந்து
விளிக்கும் கடுங் கூற்றினும் வெகுளாது மிகைத்து எழுந்து
களிக்கும் பொறிப்பகை ஐந்தும் பொறிப்பணக் காவாணத்தார்
அளிக்கும் பதம் ஐந்தில் ஐந்தெழுத்தே கொண்டு அவித்தனமே”
9. திருமேற்றிசை அந்தாதி – பாடல் – 98
”அழியோம் விரதம் திருமந்திரத்து எழுத்து ஐந்தும் அன்றி
மொழியோம் மறந்தும் பரச துறைமூர்க்கர் சொல் கேட்டு
இழியோம் இழித்தே மறை பழிப் பாரையும் யாம் அழித்துப்
பழியோம் மணி அரங்கப் பணியானைப் பணிந்த பின்னே”
10. பஞ்ச பரமேஸ்டி மந்திரம்
11. கிரியா கலாபம் – பாடல் – 116
”ஏஷ பஞ்ச நமஸ்கார
பாப கர்ம விநாசந
மங்களா நாஞ்ச ஸர்வேஷாம்
ப்ரதமம் மங்களம் பவேத்”
12. சீவக சிந்தாமணிப் பாடல்
13. தோத்திரத் திரட்டு –
14. திருக்கலம்பகம் – பாடல் – 41
15. பதார்த்தசாரம் – உபயோகாதிகாரம்

Monday, January 31, 2011
ஆபயன் குன்றும்
ஆபயன் குன்றும்
என் நண்பர் ஒருவர் (மின்தமிழ்க் குழுமத்தில் இருப்பவர்) கீழேக்
கொடுக்கப்பட்டுள்ள இடுகைகளைத் தனி மடலில் குறித்திருந்தார்.
http://www.tamilnadutalk.com/portal/index.php?/topic/18677-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/
http://www.jeyamohan.in/?p=1422
http://www.tamilbrahmins.com/general-discussions/5557-enge-brahmanana-3.html
இந்தச் சுட்டிகளில், “ஆபயன் குன்றும்…” என்ற குறளுக்குக்
கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் பற்றி என் கருத்தை
பதிய சொன்னார். சமணக் குறளுக்கு அந்தக் குறள் எவ்வாறு
பொருந்தும் என்றும் தனி பதிவிட்டு என் பிளாகில் எழுதுமாறும்
கேட்டிருந்தார்.
இக்குறளை யான் முன்னமே (அகத்தியக் குழுமத்தில்) எதிர்க்
கொண்டிருக்கிறேன். குறள் பற்றிய விவாதத்தில் எவராவது
ஒருவர், இந்தக் குறளுக்கு விளக்கம் சொல்ல போக,
அவற்றை அப்படியே உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு,
எல்லா வலைப்பக்கத்திலும் அவற்றையே எழுதத் தொடங்கி
விடுகிறார்கள். குறள் சமணம் சார்ந்தது என்றால், இந்தக்
குறளுக்கு என்ன பொருள் சொல்வார்கள் என்பது மாதிரி
கேட்கவும் தொடங்கிவிடுகிறார்கள். யாரும் அந்த குறளின்
விளக்கம்ப் பொருத்தமாக இருக்கிறதா? என்று தங்கள் அறிவில்
உரசிப் பார்ப்பதில்லை.
”ஆபயன குன்றும்…” என்றக் குறளுக்கு பரிமேலழகர் உரையைப்
பின்பற்றிச் செல்வதேயிதற்கு காரணம்.
இந்தக் குறள் “கொடுங்கோன்மை” என்ற அதிகாரத்தில் வருகிறது.
அதாவது “செங்கோன்மை” என்ற அதிகாரத்திற்குப் பிறகு
வருகிறது என்பது இங்கு முக்கியம். செங்கோன்மை என்பது
ஒரு அரசன் எவ்வாறு சிறப்பாக ஆட்சி தன் நாட்டை
ஆளவேண்டும் என்பதைச் சொல்லும். அவ்வாறே ஒரு
அரசன் எவ்வாறு முறைத் தவறி ஆட்சிச் செய்யக்கூடாது
என்பதை சொல்கிறது “கொடுங்கோமை” என்ற அதிகாரம்.
ஆபயன்
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின் – திருக்குறள் (560)
என் கருத்தைப் பார்ப்பதற்கு முன் திருக்குறள் அத்தாரிட்டியாகக்
கருதப்படும் பரிமேலழகர் (: என்ன சொல்கிறார் என்றுப் பார்ப்போம்.
பரிமேலழகர் உரை:
காவலன் காவான் எனின் – காத்தற்கரிய அரசன் உயிர்களைக்
காவானாயின்; ஆ பயன் குன்றும் – அறன் இல்லாத அவன்
நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்; அறுதொழிலோர் நூல்
மறப்பர் – அந்தணரும் நூல்களை மறந்து விடுவர்.
ஆபயன்: ஆவாற் கொள்ளும் பயன், அறுதொழிலாவன:
ஓதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்
என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும்,
அது கொடுத்தற்குரியார் மந்திரம், கற்பம் என்பன
ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம்
பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும்
அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.
இந்த உரையிலிருந்து நமக்கு தெரியவரும் கருத்துக்கள்:
அரசன் முறையாக ஆட்சிச் செய்யவில்லையென்றால்,
• ஆவினால் (பசுக்களினால்) கிடைக்கக் கூடியப் பயன்கள் கிடைக்காது,
• அறுதொழில் செய்யும் பிராமணர்களின் வேள்விகள் முறையாக நடக்காதாம்,
• முறையான வேள்விகள் நடக்காமையால், மழை பொழியாதாம், மழைப்
பொழியாததால் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுமாம் சொல்கிறார் பரிமேலழகர்.
(மனதைத் தொட்டுச் சொல்லுங்கள், இந்த உரை பொருத்தமாயிருக்கிறதா??) :-)
எப்படி உரையைச் சுற்றி வளைத்து, திரித்தெழுதியிருக்கிறார்
பாருங்கள். சரி, அந்தக் குறளுக்கு என்னதான் பொருள்?
உண்மை பொருள்
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்
என்பதற்கு,
காவலன் காவான் எனின் – அரசன் முறையாக ஆட்சி செய்து
மக்களை காப்பாற்றாவிட்டால்; ஆபயன் குன்றும் – ஆகின்ற
பயன்கள் குன்றும்/கிடைக்காது; அறுதொழிலோர்
நூல்மறப்பர் – ஆறு தொழில்கள் செய்வோர் தத்தம்
கடமைகள் முறையாக செய்யாமல், நாட்டில் எதுவும்
முறைப்படி இயங்காது என்பதாம்!
தெளிவுரை:
அரசன் நேர்மையாக ஆட்சி செய்யவில்லையென்றால்,
ஆறு தொழில்களான1, வாள், வரைவு, வாணிபம், உழவு,
கல்வி மற்றும் சிற்பம் செய்து காக்கும் ஆறு தொழிலோர்
தமது தொழில் தர்மத்திலிருந்து தவறுவார்கள், அதனால்
அந்தத் தொழில்கள்லிருந்து ஆக கூடியப் பயன்கள்
சென்றடையாது! என்னை?
ஆபயன் – என்பதற்கு பசுவினால் கிடைக்கும் பயன்கள்
என்றுப் பொருள் கொள்ளக் கூடாதா? எனின், ஆப்பயன்
என்று வந்திருந்தால் அவ்வாறுப் பொருள் கொள்ளலாம்.
ஆ+பயன் = ஆப்பயன் என்று ஒற்று மிகுதல் வேண்டும்
என்பது இலக்கண விதி!
காட்டாக: சிலப்பதிகாரத்தில் அடைக்கலக் காதையில்,
“..கவுந்தி ஐயையைக் கண்டுஅடி தொழலும்
ஆகாத்து ஓம்பி ஆப்பயன் அளிக்கும்..” – (பாடல் வரி: 199 – 120)
ஆப்பயன் என்று வருவது ஈண்டு நினைத்தற்பாலது!
அறுதொழிலோர் – ஆறு தொழிலோர் என்பது பிராமணர்களைத்
தானேக் குறிக்கும்? குறிக்காது!. இடத்திற்கு ஏற்றாற் போல்
பொருள் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் அவ்வாறுப் பொருள்
கொண்டால், அந்தக் குறளின் சிறப்புக் குன்றிப் போகும்!
எவ்வாறெனின்,
அரசன் நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும்
காக்க வேண்டுமேயன்றி, ஒருசாராரை மட்டும் (பிராமணர்களை)
காப்பாற்ற அரசாட்சிச் செய்யமாட்டான். அறுதொழிலோன்
என்றிருந்திருந்தால் அது அப்பட்டமாக பிராமணர்களைக்
குறிக்கும் என்று துணிந்துக் கூறலாம். அறுதொழிலோர்
என்பது இங்கு ஆறு தொழில்களை செய்வோரைக் குறிக்கும்.
அறுதொழிலோர் எனபதற்கு ஆறு தொழில் செய்வோர்
என்றுப் பொருள் கொண்டால், அக்குறளுக்கு சிறப்பாக அமைவதோடு
அல்லாமல் நாட்டின் சமூகத்தையும் சேர்த்தே குறித்ததுப் போலாகும்!
என்னை?
மாறாக பரிமேலழகர் உரைக் கூறுவதுபோல் ஒருசாராரை மட்டும்
போற்றுவதாக பொருள் கொள்வதை எந்த நடுநிலையாளனும் ஒப்ப
மாட்டான்! என்ன யான் சொல்வது சரிதானே!
முடிபு:
இது போன்ற குறள்களை வைத்து குறளாசிரியர் உள்ளம் காண
நினைப்பது, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போலவாம்.
குறளாசிரியர் உள்ளம் கடவுள் வாழ்த்து அதிகாரத்திலேயே தெள்ள
தெளிவாகத் தெரிந்திருந்தும், இந்த வகையான திரிபு வாதங்கள்
மூலம் வாதிப்பது அறிவுடைமையாகாது!
இரா.பா,
சென்னை.
--------------------------------------------------------------
1 -“ஒழியாக் கற்பத்தரு மருங்கி
உலகாம் போகபூ மியிடை
பழியாப் பிணங்கிமா நிலத்தோர்
பணிந்தே நிற்பக்கரந் தருளும்
உழவே தொழில் வணிக வரைவு
உற்ற சிற்பவித் தையினால்
அழியா வகை வந்தாட் கொண்டாய்
அடியோஞ் சிற்றலழி யேலே!
- ஆதிநாதர்ப் பிள்ளைத்தமிழ்
"வரைவொடு தொழிலே வித்தை வாணிகம் உழவே சிற்பம்
உரைசெய்யும் போகபூமி யொழிவினி லாதிகாலம்
விரைசெறி பிண்டிவேந்தன் விதித்த லினஃதேயம்ம
கருமபூமி என்னும் பேர்கண்ட தொன்றுண்டு நூலில்"
- சூடாமணி நிகண்டு

Sunday, January 23, 2011
சிலப்பதிகாரத்தில் அந்தணர்
சிலப்பதிகாரத்தில் அந்தணர்கள்
பண்டையத் தமிழ் இலக்கியங்களில் அந்தணன், அந்தணர் என்ற
சொற்கள் விரவி வருவதைக் காணலாம். திருக்குறளில் அறவாழி
அந்தணன் என்று இறைவனை இறைஞ்சுவார் குறளாசிரியரான
தேவர் பெருமான். அந்தணர்/அந்தணன் என்ற சொற்கள் பல
சமய இலக்கியங்களில் பயின்று வந்தாலும் அவைகள் ஒரே
பொருளில் ஆளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிலப்பதிகாரத்தில் அந்தணர்/அந்தணன் என்ற சொல்லாட்சி
இன்றைய காலக் கட்டத்தில் ‘அந்தணன்’ அல்லது “அந்தணர்”
என்ற சொல் வைதீகப் பிராமணர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்
பட்டு வருகிறது. அந்த சொற்கள் பொதுமையாயினும் சமண,
பெளத்த இலக்கியங்களில் அவைகள் சமண/பெளத்தப்
பிராமணர்களைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டு
வந்திருப்பதையும்க் காணலாம்.
இளங்கோவடிகள் தன் சிலப்பதிகாரத்தில் மூன்று வகையான
அந்தணர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
1. மாங்காட்டு மறையோன்
2. கோசிகன்
3. மாடல மறையோன்
1. மாங்காட்டு மறையோன்:
காடுகாண் காதையில், கவுந்தியடிகள், கோவலன் மற்றும்
கண்ணகி ஆகியோர் உறையூரை விட்டு நீங்கி ஒரு சோலையின்னுள்
நுழைகின்றனர். அப்போது அங்கிருந்த மண்டபத்தில் மாங்காட்டு
மறையோன் என்ற வயதான வைதிக பிராமணனைச் சந்திக்க
நேரிடுகிறது. அவரை எதிர்க் கொள்ளும் கோவலம் அவனை
வணங்காமல்,
”மாமது மறையோன் வந்திருந் தோனை
யாது நும்ஊர்? ஈங்கென் வரவெனக்?
கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின்..” 1
என்று சற்று அதிகாரத் தொனியிலேயே கேட்கத் துவங்குகிறான்
கோவலன். இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது யாதெனில்,
கோவலன், அந்த வயதான மாமது மறையோனை வணங்குவதாக
காட்டவில்லை இளங்கோவடிகள்.
2. கோசிகன் என்ற மறையோன்
உறையூரை விட்டு நீங்கி வெகு தூரம் நடந்து வந்தக் களைப்பினால்,
ஒரு ஊரின் புறமாக அவர்களை தங்க வைத்துவிட்டு தன் காலை
கடனை முடிக்க நீர் நிலையைத் தேடி செல்கிறான் கோவலன்.
அப்போது, மாதவியின் கடிதத்துடன், கோவலனைத் தேடி
எங்கெல்லாமோ அலைந்து திரிந்து வந்த கோசிகன் என்ற
அந்தணன், இவன் கோவலனோ என்று ஐயுற்று வினவ,
அதற்கு மறுமொழிக் கூறும் கோவலன்,
“யாது நீ கூறிய உரையீது?, இங்னெத்..”2
என்று கேட்கிறான். அப்போதும் அவனை வணங்குவதாகக்
காட்டவில்லை இளங்கோவடிகள்.
3. மாடல மறையோன் என்னும் அந்தணன்
அடைக்கலக் காதையில் மாடல மறையோன் என்னும்
அந்தணனைச் சந்திக்கும் கோவலன், உடனே அவன்
அடிப் பணிகிறான்.
“இடவயிற் புகுந்தோன் தன்னைக்
கோவலன் சென்று சேவடிவணங்க
நாவல் அந்தணன் றானவின் றுரைப்பான்” 3
மற்ற அந்தணர்களை வணங்குவதாகக் காட்டாத
இளங்கோவடிகள், மாடலன் என்ற அந்தணனை,
கோவலன் அடி வணங்குவதாகக் காட்டுகிறார்?
ஏன்? நிற்க!
அறக்கள வேள்வியும் மறக்கள வேள்வியும்
இளங்கோவடிகள் தன் காப்பியத்தில் மூன்றுவித வேள்விகளை
நமக்கு காட்டுகிறார்.
1. மறக்கள வேள்வி
2. மதுக்கொள் வேள்வி
3. அறக்கள வேள்வி
1. மறக்கள வேள்வி
முதல் இரண்டும் வைதிகம் சார்ந்தது. மூன்றாவது அவைதிகச்
சார்பு உடையது. மாடல மறையோன் மூன்றாம் பிரிவினன்.
சேரனுக்கு அறிவுரை வழங்கு மாடலன் அரசே மது,
கொலை உடைய மறக்கள வேள்வி செய்யாதே.
கொலையில்லாத அறக்கள வேள்வி செய் என்று
அறிவுறுத்துகிறான்.
“அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோயாயினை “ 4
என்றும்,
“..அருமறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய
பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும்..” 5
என்று சேரனுக்கு அறிவுறுத்துகிறான் மாடலன்.
இங்கு சொல்லப்பட்ட அறக்கள வேள்வி யாதுனெனின்,
இது அவைதிகச் சார்புக் கொண்ட வேள்வியாம்.அவைதிகப்
பிரிவினரான சமணர்களுக்கும் வேள்வி உண்டென்றும்,
ஆனால் அது உயிர்ப் பலி மற்றும் மது (சோம பானம்)
இல்லாத வேள்வி என்றும் பெறப்படுகிறது. சமணர்கள்
அந்த வேள்வியை ”ஓமம்” என்று அழைக்கிறார்கள்.
(இன்றும் சமணர்கள் புதுமனை புகுவிழாவில் சாந்திநாத
ஓமம் என்ற வேள்வியைச் செய்கிறார்கள் என்பதைக்
கருதவும்)
மாடலன் மறையோன் சமண அந்தணன்
மூன்று அந்தணர்களைக் குறிக்கும் இளங்கோவடிகள்,
கோவலனை மற்ற இருவரையும் அடிவணங்கச் செய்யாமல்,
மாடலன் மறையோனைக் கண்டவுடன் அடிவணங்கச்
செய்தமை இதன் பொருட்டாம்! என்னை?
நான்மறைகள்
இங்கே வாசகர்களுக்கு ஒரு வினா எழுவது இயல்பே?.
நான்மறை என்பது வைதிக வேதங்களைத் தானேக்
குறிக்கும்? என்றால்..
இல்லை. அவைகள் சமண வேதங்களையும் குறிக்கும்.
சமண இலக்கியங்களில் நான்மறை என்றும் வேதம்
என்ற பதங்கள் விரவி வருவதைக் காணலாம்.
சமண வேதங்கள் நான்கு!
ஜைன ஆகமங்களை இரண்டு வகையாகப் பிரிப்பர்.
அவை பூர்வாகமம், அங்காகமம் எனப்படும். பூர்வாகமம்
என்பது என்றும் நிலைத்திருப்பது. ஆதி பகவானால்
அருளப் பட்டது. அங்காகமம் என்பது மனிதர்களால்
எழுதப்பட்டது. ஆதிபகவன் என்று அழைக்கப்படும்
ஆதிநாதரால் அருளப்பட்ட அகமங்கள் நான்கு. இவை
ஜைன வேதங்கள் அல்லது சதுர் வேதங்கள் அல்லது
நான்மறைகள்6 என்றழைக்கப்படுகின்றன. அவைகள்,
1. பிராதமானுயோகம்
2. கரணானுயோகம்
3. சரணானுயோகம்
4. திரவியானுயோகம்
என்பன.
முடிபு:
”அந்தணர் என்போர் அறவோர்”7 என்பது திருக்குறள் வாக்கு.
எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல், எந்த உயிரையும்
வேள்விகளில் பலி கொடுக்காமல் இருப்பவர்கள் தான்
அந்தணர் என்று திருக்குறள் சொல்வது இங்கு
நினைத்தற்பாலது!
இரா.பானுகுமார்,
சென்னை
அடிக்குறிப்பு:
1. சிலப்பதிகாரம், காடுகாண் காதை, பாடல் 31 - 33
2. சிலப்பதிகாரம், புறஞ்சேரி இறுத்த காதை, பாடல்: 54
3. சிலப்பதிகாரம், அடைக்கல காதை, பாடல்: 18 - 20
4. சிலப்பதிகாரம், நடுகற் காதை, பாடல்: 131 – 132
5. சிலப்பதிகாரம், நடுகற் காதை, பாடல்: 177 – 178
6. பதிணென் கீழ்க்கணக்கு, ஏலாதி- கடவுள் வாழ்த்து
” அறுநால்வ ராய்புகழ்ச் சேவடி யாற்றப்
பெறுநால்வர் பேணி வழங்கிப் - பெறுநால்
மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்(கு)
இறைபுரிந்து வாழ்தல் இயல்பு” – பாடல் – 1
7. திருக்குறள், நீத்தார் பெருமை, பாடல் - 30

Subscribe to:
Posts (Atom)